×

சிகிச்சைக்காக வந்த இளம்பெண் மயங்கி விழுந்து சாவு: 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்த சடலம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், வந்தவாசி, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சிலர், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென உடல் நலகுறைவால், புற நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடத்தில் மயங்கி விழுந்தார். உடனே, அங்கிருந்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டார் என தெரிந்தது.

இதையடுத்து அந்த சடலம், வளாகத்திலேயே போடப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பெண்ணின் உடலை பார்ப்பதற்கோ, சொந்தம் கொண்டாடியோ யாரும் வரவில்லை. இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. பெண்ணின் உடல் அகற்றப்படாமல், மருத்துவமனை வளாகத்திலேயே, ஆதரவற்ற நிலையில் கிடந்தது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களும், பொதுமக்களும் சடலத்தை பார்த்தபடியே, செய்வதறியாது சென்றனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், மருத்துவனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. செங்கல்பட்டு டவுன்ர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து, மருத்துவமனை டீன் சாந்தி மலர் கூறுகையில், ஆதரவற்றோர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்குகின்றனர். அப்படி தங்குபவர்களில் ஒருவர்தான் அந்த பெண். போலீசார் உதவியுடன்  அவரது சடலத்தை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைதுள்ளோம் என்றார். இச்சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chengalpattu Government Hospital ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...