×

முதல்வர், அமைச்சர்கள் புகார் மீதான விசாரணைக்கு தமிழக பொதுத்துறை செயலாளர் அனுமதி பெறும் அரசாணையை ரத்து கோரி திமுக வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் 2018ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தானும், திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும். பொதுத்துறை செயலாளர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்பதால், அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரியாக கருத முடியாது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி, அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியது தானே? என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வி.அருண் ஆகியோர், அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ‘எதிர்கட்சிகள் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் காவலனாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அதன் அடிப்படையில் தான், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து, மனுவுக்கு 6 வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : revocation ,DMK ,Public Secretary ,Tamil Nadu ,Chief Minister ,Ministers ,Tamil Nadu Govt ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ்...