×

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல குறைந்த அளவு மக்களே முன்பதிவு: சிறப்பு பஸ் தொடர்பாக இன்று ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குறைவான மக்களே இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அந்தவகையில் நடப்பாண்டு வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவார்கள்.
இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. இதிலும் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் முந்தைய ஆண்டுகளைப்போல் இல்லாமல் நடப்பு ஆண்டில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு கொரோனா பரவல் காரணமாக ஐடி நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள் போன்றவை முடக்கநிலையிலேயே இருப்பது தான் காரணம். இச்சூழ்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தினை இன்று நடத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக இன்று ஆலோசனைக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும். எத்தனை பஸ்கள் இயக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். கடந்த ஆண்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் நடப்பு ஆண்டில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்துள்ளனர். ஆலோசனைக்கு பிறகு எத்தனை பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும்’என்றார்.

Tags : hometown ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா