×

மாவட்டத்தில் 7.48 லட்சம் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு

உடுமலை, ஜன. 5:  திருப்பூர் மாவட்டத்தில் 7.48 லட்சம் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, விலையில்லா வேட்டி,சேலை மற்றும் ரூ.2500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை கொண்ட சிறப்பு பொங்கல் பரிசு ரூ.199.65 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வரும் 13ம்தேதி வரை உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிக்கொள்ளலாம், என்றார்.

இதைத்தொடர்ந்து, உடுமலை நகராட்சி 25வது வார்டு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் வழங்கினார்.மேலும் பெரியகோட்டை ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் காந்தி நகர், அய்யலூர் மீனாட்சி நகர் ஆகிய இடங்களில் தார் சாலை பணி, காமராஜர் நகர் நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், சமையல் அறை கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுகந்தி முரளி, கள அலுவலர் அப்துல்ஜப்பார், கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழரசு, ஆனந்தகுமார், சோமவாரப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் அன்வர்ராஜா,நகர செயலர் ஹக்கீம், ஊராட்சி தலைவர் விமலா, நகர கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஆறுமுகம், செயலாளர் துரையன், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் முருகேசன், செயலாளர் ரவி, நில வள வங்கி மாரிகண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருப்பூர் பல்லடம் ரோட்டிலுள்ள கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்  ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இதில் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் சடையப்பன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : families ,district ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...