ரேஷன் கடைகளில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரம் பொதுமக்கள் அதிருப்தி

தாராபுரம்,ஜன.5: தாராபுரம் நகரில் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தின் மூலம் 27 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் வரிசைப்படி நேற்று பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக இவற்றை பெற பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதிமுக நகர கழக செயலாளர் காமராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கட்சிக் கொடி கட்டிய கார்களில் ரேஷன் கடைகளுக்கு வந்தனர். ரேஷன் கடைகளுக்குள் நுழைந்த ஆளும் கட்சி நிர்வாகிகள் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கியதுடன், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக முதல்வரால் வழங்கப்பட்டது. இதனை மறக்காமல் வாக்களிக்கவேண்டும், என கூறி பிரசாரம் செய்தனர்.

நிகழ்ச்சிக்காக ரேஷன் கடை முன் சாலையோரம் அதிமுக கட்சி கொடிகளுடன் பொங்கல்  பரிசு வழங்கிய தமிழக முதலல்வரை வாழ்த்தியும் உள்ளூர் நிர்வாகிகள் பெயர்  பொறித்த கட்சி பேனர்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் வழங்கப்பட்ட செங்கரும்புகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்பே கொள்முதல் செய்யப்பட்டவை என்பதால் அவை பூஞ்சான் பிடித்து உண்பதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தன. அரசு விழாவாக நடைபெற வேண்டிய பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆடம்பரமாக அரசியல் கட்சி விழாவாக நடத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Related Stories:

>