×

சேரம்பாடி வனச்சரகத்தில் யானைகள் வழித்தடத்தில் சோலார் மின்வேலிகளை அகற்ற ஆய்வு

பந்தலூர், ஜன.5: பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள சோலார் மின்வேலிகளை அகற்றுவதற்கு வனத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியில் ஒருவரும், அதைத்தொடர்ந்து  கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் தந்தை, மகன் ஆகிய மூவரையும் காட்டு யானை தாக்கி கொன்றது. அதனால், பந்தலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை வழித்தடத்தில் உள்ள சோலார் மின்வேலிகளை அகற்ற வேண்டும். கூடுதல் யானை கண்காணிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வனத்துறைக்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி முன்னிலையில் வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த போது உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து சேரம்பாடி ரேஞ்சர் (பொறுப்பு) மனோகரன் கூறியதாவது: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கொளப்பள்ளி டேன்டீ, குழிவயல், சப்பந்தோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த யானைகளை வனத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்களை வேறு வனச்சரகங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, மூன்று குட்டிகளுடன் 5 யானைகள் சேரம்பாடி காப்பிக்காடு வனப்பகுதியில் உள்ளது. சிறிய குட்டிகள் என்பதால் அந்த யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில்லை. தொடர்ந்து அந்த யானைகளை கண்காணித்து வருகிறோம்.

மேலும், சேரம்பாடி காப்பிக்காடு தனியார் தோட்டம், கிளன்ராக் தனியார் தோட்டம் பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள சோலார் மின்வேலிகளை அகற்றுவதற்காக ஆய்வு மேற்கொண்டபோது அவை அனைத்தும் யானைகளே உடைத்து சேதம் செய்து செயல் இழக்க செய்தது ஆய்வில் தெரிய வருகிறது. அதை மீண்டும் புதுப்பிக்க அனுமதி அளிப்பதில்லை. தொடர்ந்து யானை மனித மனித மோதலை தடுப்பதற்கு வனத்துறை சார்பில் பல்வேறு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு வனத்துறை சார்பில் இரவும் பகலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : removal ,Elephant Route ,Serampore Wildlife Sanctuary ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...