×

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

ஈரோடு, ஜன.5: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு போன்ற பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் துவங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,144 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு பொருட்களை ஒரே தொகுப்பாக பேக் செய்து ரொக்க பணம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதில், ஈரோடு மேற்கு தொகுதியில் காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளையும், ரொக்கத்தையும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம் வழங்கி துவக்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், பி.பெ.அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ. தென்னரசு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். பெரியார் நகர் பகுதியில் முன்னாள் மண்டல தலைவர் மனோகரன் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன், தாசில்தார் பரிமளா தேவி, பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், கேசவமூர்த்தி, தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி துணைச் செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், மாநகர் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் பெற்றுக்கொள்ளும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருந்ததால் கூட்ட நெரிசல் இன்றி பொதுமக்கள் வரிசையாக காத்திருந்து வாங்கி சென்றனர்.

மேலும், ரேஷன் கடைகளில் பல லட்சம் ரூபாய் பணம் இருப்பு வைத்து வழங்கப்படுவதால், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகை, பொருட்கள் பெற முடியாதவர்கள் 13ம் தேதி அன்று ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோபி : ஈரோடு மாவட்டத்தில் 1144 ரேஷன் கடைகளில், 7.11 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.

Tags : ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு