மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க கோரி மனு

ஈரோடு, ஜன.5:  தமிழகத்தில்  அனைத்து மாவட்டங்களிலும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு  மறுவாழ்வு, தொழிற்பயிற்சி மையத்துடன் கூடிய உண்டு உறைவிட பள்ளி அமைக்க  வேண்டும் என கோரி மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட  மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவி சுமதி, செயலாளர்  தவசிகுட்டி ஆகியோர் தலைமையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி  சீனிவாசனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசின் சார்பில் சுய தொழில் செய்ய தனியார் நிறுவனங்கள் தானாக முன்வந்து  பெட்டிக்கடைகள் அமைத்து கொடுத்து பல உதவிகளை 100 சதவீத மானியத்தில்  வழங்குகின்றன. ஆனால், கடைகளை நடத்த மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை  துறையினர் அனுமதி தர மறுக்கின்றனர்.

இதில், கடந்த சில நாட்களாக காவல்  துறையினர் கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். இதனால், எங்களது  வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம்  மேம்பட பெட்டிக்கடை வைத்துக்கொள்ள அனுமதித்து, அதற்கான நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள்  அனைவருக்கும் பாகுபடின்றி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர  பராமரிப்பு தொகை ரூ.1,500 வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மனவளர்ச்சி  குன்றிய குழந்தைகளின் தாயார்களுக்கு மோட்டார் பொருத்திய விலையில்லா தையல்  இயந்திரம் வழங்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 14  வயது உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி,  மறுவாழ்வு பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய உண்டு  உறைவிடப்பள்ளி அமைக்க வேண்டும்.

Related Stories:

>