×

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க 2 நாட்களில் அரசாணை வெளியாகும்

ஈரோடு, ஜன.5: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது குறித்த அரசாணை 2 நாட்களில் வெளியாகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்கு மட்டும் அணையில் இருந்து பவானி ஆற்றில் 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு 2ம் பருவத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு அறிவிப்பு தாமதமாகி வருவதால் நிலம் சமன் செய்தல், இடுபொருட்கள் தயார்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,`வரும் 7ம் தேதி முதல் கீழ்பவானியில் 2ம் பருவத்திற்கு தண்ணீர் திறக்க அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டு விட்டது. மேலும், அணையின் நீர்மட்டமும் இந்தாண்டு திருப்திகரமாக உள்ளது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் 2ம் பருவத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை. 2 நாட்களில் அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

Tags : government ,Keelpavani ,canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்