×

சாலை விரிவாக்க பணிக்காக திருச்சியில் 200 கடை, வீடுகள் இடித்து அகற்றம்

திருச்சி, ஜன. 5: திருச்சி அடுத்த செம்பட்டில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 200 கடை மற்றும் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. திருச்சியில், சுப்ரமணியபுரம் முதல் ஜெயில் கார்னர் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருபுறங்களிலும் சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணியில் இறங்கியுள்ளது. இதற்காக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், தேவாலயம் ஆகியவை இடிக்க திட்டமிட்டு அவர்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கி கால அவகாசம் வழங்கினர். ஆனால், அவர்கள் காலி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் சுப்ரமணியபுரம் முதல் ஜெயில் கார்னர் வரை உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள், ஒருசில வீடுகள், கிறிஸ்தவ ஆலயம் ஆகியவைகளை போலீசார் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.

இதேபோல் ஏர்போர்ட் முதல் திருவளர்ச்சிப்பட்டி வரை நெடுஞ்சாலை ஓரங்களில் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் பொக்லைன் மூலம் இடிக்கப்பட்டது. இதனால் வீடுகளை இழந்தோர் நிர்க்கதியானதால் குழந்தைகள் மற்றும் பொருட்களுடன் அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக பகுதி செயலாளர் பாலமுருகன் தலைமையில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ஏர்போர்ட் சோதனைசாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பில் இருந்து கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோயில் உள்ளே சென்ற ஒரு பெண் சாமி சிலையை கட்டிப்பிடித்து கொண்டார். அந்த பெண்ணை பெண் போலீசார் குண்டு கட்டாக கட்டி வெளியே அப்புறப்படுத்தினர். அப்போது அந்த பெண் கோயிலை இடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டது காண்போரை வருத்தமடைய செய்தது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தொடர்ந்து கோயில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Demolition ,shops ,houses ,Trichy ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ