×

ஆட்டு பண்ணை குறித்து பயிற்சி அளிப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது வீடியோ எடுத்து மிரட்டியதால் சிக்கினார்

திருச்சி ஜன. 5: திருச்சி கோட்டை சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் அப்துல்சத்தார் மகன் சவுகத்அலி (47). இவர் தற்போது தில்லைநகர் சாலை ரோட்டில் வசித்து வருகிறார். இவர் சமயபுரம் அருகே ஆடு பண்ணை வைத்துள்ளார். இவரிடம் ஆடு பண்ணை குறித்த பயிற்சி பெறுவதற்காக லால்குடி அடுத்த வடுகர்பேட்டையை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். இந்நிலையில் அந்த பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி அவருடன் உல்லாசமாக இருந்த சவுகத்அலி, ஒரு கட்டத்தில் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் ஆபாச போட்டோ மற்றும் வீடியோவை அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பியதை அடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த கோட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், நேற்று சவுகத்அலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தி சிறையில் அடைத்தார்.

மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், கவுண்டம்பட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகள் பிளஸ்2 படித்து விட்டு மேல் படிப்பிற்காக காத்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் மர்ம காய்ச்சல் தாக்கி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலையில் நேற்று முன்தினம் திடீர் பின்னடைவு ஏற்படவே, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி இறந்தார். மர்ம காய்ச்சல் தாக்கி பிளஸ் 2 இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழ வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது: திருச்சி கார்ப்பரேசன் பகுதியை சேர்ந்தவர் கோபி (45). மேலப்புலிவார் ரோடு இப்ராஹிம் பார்க் அருகே தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் இவரிடம் நேற்று முன்தினம் கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி பாஸ்கர் (எ) கொட்டப்பட்டு பாஸ்கர் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த கோட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பணம் பறித்து சென்ற ரவுடி பாஸ்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இளம்பெண் மர்ம சாவு: திருச்சி குண்டூர் எம்.எம்.நகரை சேர்ந்தவர் உஷா (48). இவரது தங்கை கஸ்தூரி (25). இவர் திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போதே இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த கஸ்தூரியை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதற்கிடையில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக கூறி கஸ்தூரியின் அக்கா உஷா, கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என போலீசார் கூறினர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு: திருச்சியில் கடனுக்கு சிக்கன் கேட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் விஸ்வாஸ் நகர் வெல்டர்ஸ் நகரை சேர்ந்தவர் இப்ராம். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பழைய பால்பண்ணை அருகே சர்வீஸ் ரோட்டில் தள்ளுவண்டியில் சில்லி சிக்கன் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி வரும் குடிமகன்கள் இரவு நேரங்களில் இவரது தள்ளுவண்டி கடை அருகே உள்ள இருட்டு பகுதியில் மது குடித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி வரகனேரி தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி மணி (எ) மணிகண்டன் (31), சதீஷ் (எ) சதீஷ்குமார் (25), இனாம் சமயபுரம் பாபு (எ) சுரேந்திரபாபு (26), பழைய சமயபுரம் வேட்டைக்கார தெரு சியான் (எ) சிலம்பரசன் (20) ஆகிய 4 பேர் அங்கு வந்து இப்ராமிடம் கடனுக்கு சிக்கன் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணன் ரவுடியான ரிஸ்வானுக்கு, இப்ராம் போனில் தகவல் அளித்தார்.

அங்கு வந்த ரிஸ்வான், 4 பேரிடம் என்னவென்று கேட்டபோது ஆத்திரமடைந்த 4 பேரும் ரிஸ்வானை தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியும், கடையை அடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரிஸ்வான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், தலைமறைவான 4 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இதில் ரவுடி மணிகண்டன் மீது காந்திமார்க்கெட், பாலக்கரை, கன்டோன்மென்ட் ஆகிய காவல் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : goat farm ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு