×

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும்

கும்பகோணம், ஜன.5: கும்பகோணத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஜான்சிராணி கலந்துகொண்டு நிருபர்களிடம் கூறியதாவது: தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3,000 வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் குறைந்தபட்சம் மாதம் 3,000 ரூபாயும், கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 5,000 தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வலியுறுத்துகிறது. எனவே தனியார் துறையில் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதப்படுத்திட விதி உள்ளது சட்டம் அமலுக்கு வந்தது. 4 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் மத்திய, மாநில அரசுகள் இந்த சட்ட விதியை அமல்படுத்த மறுக்கின்றன.

உடனே தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். அரசு துறையில் வேலைவாய்ப்பில் பொதுவாக குறைந்து வரும் நிலையிலும் அரசு துறைகளில் 4 சதவீத பணிகளை வழங்க வேண்டுமென்றசட்ட விதியை முழுமையாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மறுப்பதாலும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். காலிப் பணியிடங்களை 3மாத காலத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்பிட வேண்டும். வருகிற பிப்ரவரி 9ம் தேதி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற உள்ளது.

ரேஷன் கடைகளில் பிஎச்எஸ் கார்டு முன்னுரிமை கார்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றி தரவேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி மாற்றுத் திறனாளிகளுக்கு நாலு மணி நேரம் வேலை முழு ஊதியம் ரூ.256 வழங்கிட உத்தரவாதப்படுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளியின் பாதுகாவலருக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் நம்புராஜன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Telangana ,states ,Pondicherry ,
× RELATED தென் மாநிலங்களில் உள்ள 131 தொகுதிகளில்...