×

தெலுங்கன்குடிகாடு- வடசேரி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை அகற்ற வேண்டும்

ஒரத்தநாடு, ஜன.5: ஒரத்தநாடு அடுத்த வடசேரி சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரத்தநாட்டிலிருந்து தெலுங்கன்குடிகாட்டில் பிரியும் வடசேரி செல்லும் சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களும், பஸ்களும் சென்று வருகின்றது. இதனால் அச்சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாக இருக்கும். இந்த சாலையை விரிவுபடுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தெலுங்கன்குடிக்காட்டிலிருந்து வடசேரி வரை உள்ள நெடுஞ்சாலை தார்சாலையாக போடும்பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் மின்கம்பம் சாலையில் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலைப்பணியின்போது போக்குவரத்துக்கு ஏற்றார்போல் மின்கம்பங்களை அப்புறப்படுத்தி சரிசெய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது-

மேலும், பூவத்தூரில் உள்ள கீழ்பாலம் பழுதடைந்து உள்ளதால், அதை தரமான முறையில் சரி செய்யாமல் மேலே கப்பி போட்டு, பள்ளத்தை சரி செய்துள்ளனர். அப்பகுதியில் கனரக வாகனங்கள் சென்றால் அந்தப்பகுதி மீண்டும் பள்ளமாகி மீண்டும் பழைய நிலைக்கு மாறி, போக்குவரத்து துண்டிக்கும் நிலை உள்ளது. புதியதாக போடப்படும் சாலையின் ஓரத்தில் மண் கொட்டாமலும், தரமற்ற வகையில் சாலை போடப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், தெலுங்கன்குடிகாட்டிலிருந்து வடசேரி செல்லும் சாலையில் தரமான முறையில் சாலைகள் போடப்படுகிறதா, சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். கீழ்பாலத்தில் தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இச்சாலையை பயன்படுத்தும் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : Removal ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி