×

ஜெயங்கொண்டம், விக்கிரமங்கலம் பகுதிகளில் 2.33 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

அரியலூர், ஜன.5: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்படி ரேஷன் கடைகளில் தலா ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில், பயனாளிகளுக்கு தலா ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி கலெக்டர் ரத்னா பேசியதாவது, அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் 440 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 2,33,739 குடும்ப அட்டைதாரர்களுக்கு முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசியுடன், தலா ரூ.2,500 வீதம் ரொக்கமும், தொகுப்பு பையும் சேர்த்து இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.2500ஐ தொடர்புடைய ரேஷன் கடைகள் மூலமாக இன்று (நேற்று) தொடங்கி, வரும் 12ம் வரை வழங்கப்படவுள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு 13ம் தேதி வழங்கப்படும். அதன் அடிப்படையில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு முற்பகலில் 100 குடும்ப அட்டைகளும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளும் வழங்கும் நாள், நேரம் போன்ற விபரங்களைக் குறிப்பிட்டு வீடுகள் தோறும் நேரில் சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

முற்பகலில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடையில் வழங்கப்படும். எனவே, இப்பரிசு தொகுப்பினை பெற்று பொங்கல் திருநாளை சிறப்பாக அனைவரும் கொண்டாடுமாறு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழுத்தலைவர் மகாலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : family card holders ,areas ,Wickramangala ,Jayangondam ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...