காவிரி ஆற்றங்கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜன. 5: மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் மயிலாடுதுறை அருகே ஆனந்தாண்டவபுரம் சாலையில் உள்ள கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இந்நிலையில் 14வார்டு பகுதியில் உள்ள கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையோரம் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகளை நகராட்சி நிர்வாகமே கொட்டி வருகிறது. 14, 15, 16 உள்ளிட்ட வார்டுகளில் சேரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்டுவதால் குப்பைகள் டன் கணக்கில் கொட்டி மலை போல் தேங்கியுள்ளது.

மேலும் குப்பைகளை கொளுத்தி விடுவதால் ஏற்படும் புகை மண்டலத்தால் அருகில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் துற்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வக்கீல் வேலு, குபேந்திரன்காடு விடுதலை கழக மாவட்ட செயலாளர் மகேஷ் உட்பட திருநங்கைகளுடன் மாப்படுகை கிட்டப்பா பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர் இங்கு குப்பை கொட்டுவதை கைவிட வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த போராட்டத்தில் இன்னும் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுப்பையா தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories:

>