கொள்ளிடம் அருகே நியாய விலைக்கடை முன் அதிமுக சார்பில் வைத்த பேனரை அகற்றக்கோரி திமுகவினர் மறியல்

கொள்ளிடம், ஜன. 5: கொள்ளிடம் அருகே நியாய விலைக்கடை முன் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பேனரை அகற்றக்கோரி திமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தர்காஸ் கிராமத்தில் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நியாய விலைக்கடை உள்ளது. இந்த கடையின் மூலம் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவக்கி வைக்கப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் நியாய விலைக்கடை அருகே ஊற்ற வங்கி இயக்குனர் கோவிந்தன் விஜயரங்கன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விளம்பர பேனர் வைத்தனர்.

அதில் இரட்டை இலை சின்னமும், புரட்சி தலைவி நல்லாட்சி தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் புகார் செய்தார். அதில் அரசு நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற வேண்டும் என்று தெரிவி–்க்கப்பட்டிருந்தது. ஆனால் விளம்பர பேனர் அகற்றப்படவில்லை. இதை கண்டித்தும், விளம்பர பேனர் வைத்தவர்களை கைது செய்ய கோரியும் தற்காஸ் கிராமத்தில் நியாய விலை கடை அருகே புதுப்பட்டினத்தில் இருந்து பழையாறு செல்லும் நெடுஞ்சாலையில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஊராட்சி தலைவர் மூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆளவந்தார், கிளை செயலாளர் அழகேந்திரன், ராஜா, ராமலிங்கம், காத்தமுத்து மற்றும் திமுகவினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் கிடைத்ததும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் நியாய விலைக்கடை அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரை அதிமுகவினரே அகற்றினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலால் புதுப்பட்டினத்தில் இருந்து பழையார் துறைமுகம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 50 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மயிலாடுதுறை:  மயிலாடுதுறை ஆராய தெரு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கிளை முன்பு அதிமுகவினர் வைத்துள்ள விளம்பர பேனரை அகற்ற கோரி கடை முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சேயோன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாலை 6 மணிக்குள் பேனர் அகற்றப்படும் என்றனர். ஆனால் மாலை 6 மணியாகியும் பேனர் அகற்றாததால் தர்ணாவில் ஈடுபட்ட அனைவரும் மயிலாடுதுறை- திருவாரூர் சாலை கேணிக்கரை என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>