×

நகராட்சியால் போடப்பட்ட புதிய சாலையில் மெகா பள்ளம் பணிகள் தரமில்லை என புகார்

சிவகாசி, ஜன.5:  சிவகாசியில் நகராட்சி சார்பில் போடப்பட்ட தார்ச்சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா காலனி பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காமராஜர் சிலையில் இருந்து ரயில்வே நிலையம் வரையிலான சாலை ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. சாலை தரமானதாக போடப்படாததால் ஒரு சில மாதங்களிலேயே சேதமடைய துவங்கியது. அண்ணாகாலனி அருகே சாலையின் நடுவே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் அருகே பேரி கார்டுகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே இதனை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், காமராஜர் சாலை நகரின் மைய பகுதியில் உள்ளதால் தினமும் ஏராளமான டூவீலர்கள், வாகனங்கள் செல்கின்றன. ரயில் நிலையம் இந்த சாலையில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. அண்ணா காலனி, காரனேசன் பேக்கரி அருகே சாலையின் நடுவில் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இதேபோன்று காமராஜர் சிலை அருகே சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இந்த வழியாக வாகனங்கள் வேகமாக வரும் போது கற்கள் இடறி விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. ரயில் நிலைய சந்திப்பு சாலை அருகே குண்டும்குழியுமாக உள்ளது. இங்கு நான்கு ரோடுகள் சந்திப்பதால் கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த இடத்தில் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,municipality ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...