×

வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை திமுக வக்கீல் குழு கண்காணிக்கும் திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

விருதுநகர், ஜன. 5: சடட்மன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை திமுக வழக்கறிஞர் குழு கண்காணிக்கும் என முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக கிட்டங்கியில் சட்டமன்ற தேர்தலுக்காக 4,132 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,162 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,403 வாக்காளர் காகித தணிக்கை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியை பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் 10 பேர் அடங்கிய குழு நேற்று தொடங்கியது. இப்பணியை கலெக்டர் கண்ணன்  தலைமையில், திமுக எம்.எல்.ஏக்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர்.

இது குறித்து திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளது. சரிபார்ப்புகளையும், தொடுகிற சின்னம் வாக்குச்சீட்டில் பதிவாகிறதா என்பதையும் உறுதி செய்தோம். மின்னணு இயந்திரங்களின் பிரச்னை பற்றி தினசரி பல தகவல்கள் வெளியாகின்றன. இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு வழக்கறிஞர்கள் வீதம் 7 சட்டமன்ற தொகுதிக்கு 14 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தினசரி சரிபார்ப்பு பணியை கண்காணிப்பர். வேட்பாளர்கள் அறிவித்து, இறுதி சரிபார்க்கும் பணி நடைபெறும் வரை திமுக வழக்கறிஞர்கள் குழு சரிபார்ப்பு பணியை கண்காணிக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ மற்றும் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ உடனிருந்தனர்.

Tags : DMK ,Sathur Ramachandran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி