அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க பெண் டாக்டர் நியமிக்க வேண்டும் வத்திராயிருப்பு மக்கள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு, ஜன.5: வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க பெண் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வத்திராயிருப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நகரில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் கூமாப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து காலை மாலை வேளைகளில் வௌி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மருத்துவமனையில் 92 படுக்கைகள் உள்ளன. இதில் 60 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரசவத்திற்கு பெண் டாக்டர் இல்லாததால் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இருக்கின்ற நர்சுகள், ஆண் டாக்டர்கள் உள்ளிட்டோர் பிரசவம் செய்து வருகிறார்கள். பெண் டாக்டர் இருந்தால் அதிகளவில் பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். எனவே பெண் டாக்டர் நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், தலைமை டாக்டர் உள்பட 10 டாக்டர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஆனால் 7 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். 3 டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அதோடு காவலர் ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. காவலர் நியமனம் செய்யப்படவில்லை. எக்ஸ்ரே பிரிவிற்கு ஏழு ஆண்டுகளாக பணியாளர் இல்லை. எக்ஸ்ரே கருவியும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. உடனடியாக எக்ஸ்ரே பிரிவிற்கு பணியாட்கள் நியமனம் செய்து உடனடியாக நவீன முறையில் எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட வேண்டும். மருத்துவனையில் துப்புரவு பணியாளர்களும் நியமனம் செய்ய வேண்டும். வத்திராயிருப்பு தாலுகாவாக மாறியுள்ள நிலையில் மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் வசதிகள் மற்றும் பல்வேறு சிகிச்சை பிாிவுகளும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: