×

உத்தமபாளையம் யூனியனில் ஓராண்டில் 4 பிடிஓ.,க்கள் மாற்றம் பணிகள் பாதிக்கப்படுவதாக ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

உத்தமபாளையம், ஜன. 5:உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் பணிகளை கவனிக்கக்கூடிய, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (பிடிஓ.,க்கள்) ஓராண்டில் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர்.
ஒன்றியக் கவுன்சிலர்களால் நெருக்கடி கொடுக்கப்பட்டு மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பி.டி.ஓ.வாக பணியாற்றிய தனலட்சுமி மாற்றப்பட்டார்.  இதை தொடர்ந்து உத்தமபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம், கூட்டமைப்பு தலைவர் ராயப்பன்பட்டி பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். சங்கத்தின் துணைத்தலைவர் ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் வரவேற்றார்.கூட்டத்தில், ‘தமிழக அரசு கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்காக, நிதி வழங்கி குடிநீர், வடிகால், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது.

ஆனால், அடிக்கடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும்போது, கிராமங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கிராமங்களில் நடக்கும் அனைத்து பணிகளும் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து அதிகாரங்கள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ஒன்றியக் கவுன்சிலர்கள் தலையிட முயன்று, வளர்ச்சி திட்டப்பணிகளை முடக்குவதை கண்டிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், லட்சுமி நாயக்கன்பட்டி செல்லப்பா, மேலசிந்தலைசேரி ராஜன், உ.அம்மாபட்டி கவிதா நாகராஜ், அணைப்பட்டி தீபா, கோகிலாபுரம், கருப்பையா, தே.சிந்தலைசேரி செல்வராணி, பல்லவராயன்பட்டி உமாமகேஸ்வரி, தே.ரங்கநாதபுரம் வசந்தி சிவசூர்யன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Tags : Federation ,Panchayat Leaders ,PDOs ,Uththamapalaiyam Union ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்