×

கொரோனா கட்டுப்பாட்டால் களையிழந்த சபரிமலை சீசன் குமுளியில் வியாபாரம் கடும் பாதிப்பு காற்றாடிய சிப்ஸ் கடைகள்; இளைஞர்களுக்கு வேலையிழப்பு

கம்பம், ஜன. 5: கொரோனா கட்டுப்பாடுகளால் ஐயப்ப பக்தர்கள் வருகை குறைந்ததால், தமிழக-கேரள எல்லையான குமுளியில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிப்ஸ் கடைகளில் காத்தாடி, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை சீசன் நவ.15ல் தொடங்கி ஜன.20 வரை இருக்கும். இந்த சமயத்தில்சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தேனி, கம்பம் வழியாக குமுளி வந்து கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் செல்வர். சாமி தரிசனம் முடிந்து மீண்டும் குமுளி வழியாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். கோயிலிலிருந்து அப்பம், அரவணைப் பாயாசம் வாங்கி வரும் ஐயப்ப பக்தர்கள் குமுளியில் ஏத்தக்காய் சிப்ஸ், அல்வா வாங்கிச் செல்வர். இதற்காக குமுளியில் நூற்றுக்கணக்கான சிப்ஸ் கடைகள் திறக்கப்படும். இக்கடைகளுக்கு கம்பம், கே.கே.பட்டி, கூடலூர், உத்தமபாளையத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சீசன் வேலைக்கு வருவர்.

இவர்களுக்கு தினசரி ரூ.500 முதல் 1000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்க, கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சீஷன் தொடங்கியது முதல் டிச.2 வரை 1000 பேருக்கும், டிச.3 முதல் டிச.20 வரை 2,000 பேருக்கும், டிச.21 முதல் 5,000 பேருக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளால், பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், இந்தாண்டு குமுளியில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சிப்ஸ் கடைகள் திறக்கப்படவில்லை. குறைவான எண்ணிக்கையில் திறக்கப்பட்ட சிப்ஸ் கடைகளிலும் வியாபாரம் இல்லை. இதனால், கடைகளை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Businesses ,season ,Sabarimala ,Corona ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு