டெல்லி: டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற தீவிரவாதி எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கார் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் திடீரென வெடித்ததால், அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரின் CCTV காட்சி:
டெல்லி கார் வெடிப்பில் சம்மந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கார் சென்ற இடங்களில் சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன்படி கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது. குண்டுவெடிப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவானது. காரை ஓட்டியவர் ஒல்டு டெல்லி ரயில் நிலையத்தில் உறவினரை இறக்கிவிட்டு விட்டு திரும்பியுள்ளார். டெல்லிக்குள் ஐ20 வாகனம் பதர்பூர் எல்லை வழியாக டெல்லியில் நுழைந்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெளியான பரபரப்பு தகவல்கள்:
டெல்லியில் காரை ஓட்டி வந்தது காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் நபி, தீவிரவாதி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. சுமார் 3 மணிநேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார், மாலை 6.48க்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் முகமது உமர் நபியின் தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது உமர் தலைமறைவாக உள்ளார். அவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவரா என்றும் விசாரிக்கப்படுகிறது. வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் வகை, எப்படி காரில் பொருத்தப்பட்டது உள்ளிட்டவை தீவிரமாக ஆராயப்படுகின்றன. இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
