×

தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் குப்பை கிடங்கால் சுகாதாரக்கேடு

தேவகோட்டை, ஜன.5: தேவகோட்டை நகர் சரஸ்வதி வாசக சாலை தெருவில் ஆதிதிராவிடர் நலக்குடியிருப்பு உள்ளது. நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் தொழிலாளர்களின் குடும்பங்கள் 60க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் சுகாதாரப் பராமரிப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். எங்கள் பகுதி குப்பை கிடங்காக காட்சி அளிக்கிறது. சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்வது கிடையாது. நள்ளிரவு நேரங்களில் செப்டிக் டேங்க் கழிவுகளை மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாக்கடையிலேயே விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. டெங்கு, மலேரியா, போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அச்சத்துடனேயே வசித்து வருகின்றோம். நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் கண்டு கொள்ள மறுக்கின்றனர். எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் நேரடி கவனம் செலுத்தி எங்களுக்கு தீர்வு கிடைக்க வழி ஏற்படுத்தித் தாருங்கள் என்ற கோரிக்கை மனுவினை அப்பகுதி மக்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளனர். நகரில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு சுகாதாரமின்றி இருப்பதை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.


Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...