விண்ணப்பித்து பல ஆண்டுகளாக சத்துணவு பணி கிடைக்காத பரிதாபம்

சிவகங்கை, ஜன.5: சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சுமார் ஆயிரத்து 320 பள்ளிகள் உள்ளன. இதில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்டோர் சத்துணவு வழங்கும் பணிக்கு நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு தொடக்கத்தில் 150 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நேர்காணல் அறிவிக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2018ம் ஆண்டு மே மாதம் 150 சத்துணவு அமைப்பாளர், 456 சமையல் உதவியாளர், 38 சமையலர் ஆகிய 644 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் பணி நியமனம் செய்யப்படாமல் அந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பரில் மீண்டும் 184 சத்துணவு அமைப்பாளர், 442 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அக்.3ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இப்பணியிடங்களுக்கு 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சத்துணவு பணியாளர் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஆளும் கட்சியினர் பண வசூல் நடத்தினர். அதை திருப்பி வாங்க முடியாமல் பலர் உள்ள நிலையில் மீண்டும், மீண்டும் இப்பணியிடங்கள் நிரப்புவதில் குளறுபடி ஏற்படுவதால் தகுதியுடைய ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: ‘‘தங்கள் வசிப்பிடம் உள்ள ஒன்றியங்களுக்குள் தான் விண்ணப்பிக்க வேண்டும் ஆனால் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் அனைத்து ஒன்றியங்களிலும் அனைவரும் விண்ணப்பித்தனர். ஆளும்கட்சி சார்பில் பல லட்ச ரூபாய் வசூலும் செய்யப்பட்டது. தகுதி உள்ளவர்களுக்கு பணி வழங்குவதா, பணம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்குவதா என்பதுதான் ஆண்டுக்கணக்கில் பணியிடம் நிரப்ப முடியாததற்கு காரணம். தொடர்ந்து நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்படும் சத்துணவு பணியாளர் பணியிடங்களை மேலும் கால தாமதப்படுத்தாமல், முறைகேடுகள் இல்லாமல் தகுதியுடையோரை வைத்து உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories:

>