×

பாதுகாப்பற்ற இடங்களில் வகுப்பறை மாணவர்கள் பாதிப்பு

சிவகங்கை, ஜன.5: சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற இடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கவனிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆன்லைன் மூலம் வகுப்பெடுத்தல், மாணவர்களுக்கு சத்துணவிற்கான பொருட்களை அவர்களிடம் வழங்குதல் மற்றும் அலுவலக பணிகளை செய்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு பாடம் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் இதுபோல் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சமுதாயக் கூடங்கள், காலியாகவுள்ள வீடுகள், கட்டிடங்கள், திறந்த வெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள், அப்பகுதியிலுள்ள மாணவ,மாணவிகளை அழைத்து வந்து பாடம் நடத்துகின்றனர். மழை காலங்களில் பள்ளிகளில் பாதுகாப்பற்ற வகுப்பறை கட்டிடம் அருகிலேயே மாணவ, மாணவிகள் செல்லக்கூடாது என ஆண்டுதோறும் உத்தரவிடப்படும்.

ஆனால் தற்போது தினமும் பகலிலும் மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள், மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கும் இடங்கள் அருகிலேயே ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு மழை காலங்களில் ஏற்படும் டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய் பரவல் மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதற்கு கடும் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:கிராமங்களில் கூட பள்ளிகள் இருக்கும் நிலையில் அவைகளை மூடி விட்டு, கிடைக்கும் கட்டிடங்களில், திறந்த வெளிகளில் பாடம் நடத்துவது ஏற்க கூடியதாக இல்லை. பள்ளிகளை மூடிவிட்டு இதுபோல் செய்தால் கொரோனா உள்ளிட்ட மற்ற நோய்கள் பரவாது என எந்த அடிப்படையில் அதிகாரிகள் நினைக்கின்றனர் என தெரியவில்லை. கிடைக்கும் இடங்களில் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு பதில் உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: இடங்களை ஆசிரியர் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் இடங்களில் தான் பாடம் நடத்துகிறோம். பள்ளிகளில் மட்டுமே கொரோனா பரவும் மற்ற இடங்களில் பரவாது என்பது போல் அதிகாரிகள் உள்ளனர். இதுபோன்ற பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை விடுத்து, உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்றனர்.

Tags : classroom students ,places ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...