×

புதிய பாடத்திட்டம் தொடர்பாக 23, 24ம் தேதி உயர்மட்ட குழு முதல் ஆலோசனை கூட்டம்

சென்னை: மாநில கல்விக்கொள்கை குறித்து உயர்மட்டக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நவம்பர் 23, 24ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை-2020க்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநர் குழு மற்றும் அதை மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயர்மட்டக் குழுவை பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் நியமனம் செய்தது.

அதன்படி உயர்மட்டக் குழுவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 16 பேர் உள்ளனர். அதேபோல், பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில் மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில், விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் உள்பட 20 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த இரு குழுக்களின் உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து புதிய பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நவம்பர் 23, 24ம் தேதிகளில் நடக்க உள்ளது.

அந்தவகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 2 குழுக்களின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள், துறைகள் சார்ந்த தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முதல்கட்டமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் புதிய பாடத்திட்டம் அமல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu government ,Union government ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...