கோபால்பட்டி, ஜன.5: சாணார்பட்டி அருகே வீர சின்னம்பட்டி பஞ்சாயத்து உள்ளது. இங்கு அதிமுகவைச் சேர்ந்த ஜெயலெட்சுமி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர் நூறுநாள் வேலை திட்டம் மற்றும் கழிவறை கட்டும் திட்டங்களில் முறைகேடு செய்ததாகவும், இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நேற்று அதே கிராமத்தை சேர்ந்த தனபால் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து தனபால் கூறுகையில், வீர சின்னம்பட்டி பஞ்சாயத்தில் பணி தல பொறுப்பாளராக உள்ளவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் துணைபோகின்றனர். பத்து வருடத்திற்கு மேல் இந்த பஞ்சாயத்தில் வேலை செய்வதால் பல மோசடிகள் நடைபெற்று வருவதால் பொறுப்பாளர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.