×

கலெக்டர் அலுவலகத்தில் 2மகள்களுடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

நாகர்கோவில், ஜன.5: .நாகர்கோவில் அருகே பறக்கை, காடேற்றி பகுதியை சேர்ந்தவர் பொன்னையா மகன் சுதாகரன் (36). இவர் நேற்று காலை தனது 2 மகள்களுடன் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அலுவலக வாசல் அருகே சென்றவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அப்பகுதியில் நின்றவர்கள் காப்பாற்றினர். அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலையும் பறித்தனர். பின்னர் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி தன்னையும், மகள்களையும் விட்டு பிரிந்து வாலிபர் ஒருவருடன் சென்று விட்டதாகவும், அதனால் நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்ததாகவும் கூறினார். அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி சுபா மாலினியுடன்(31) காடேற்றியில் வசித்து வந்தேன். மனைவி சுபா மாலினி கடந்த 23.11.2020 காலை 10 மணி அளவில் திட்டுவிளை அருகே வாட்ஸ்புரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு வங்கியில் பணம் எடுத்து வருவதாக 2 பிள்ளைகளையும் அழைத்து  சென்றார். பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் எனது மாமியார் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டு என்னிடம் பேசிய எனது மனைவி, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து விட்டேன். பிள்ளைகளை எனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால் 4 மணி நேரம் ஆகியும் எனது மனைவி வீட்டிற்கு வரவில்லை.

பின்னர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 26.11.2020 அன்று பூதப்பாண்டி காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தேன். இந்தநிலையில் எனது மனைவி 14.12.2020 அன்று பாலச்சந்தர் என்ற சந்தோஷ் (24) என்பவருடன் சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் ஆஜரானார். பூதப்பாண்டி காவல்நிலைய போலீசார் அங்கு சென்று அவர்களை அழைத்துவந்து விசாரித்து எனது மனைவியை மாமியார் ஆசீர்பாயுடன் அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் மீண்டும் 28.12.2020 அன்று மதியம் 2 மணிக்கு எனது மாமியார் வீட்டில் இருந்து எனது மனைவியை சந்தோஷ் காரில் வந்து கடத்தி சென்று விட்டார். இந்த தகவல் அறிந்து பல இடங்களில் தேடியும் எனது மனைவி கிடைக்க வில்லை. எனவே எனது புகார் மனுவை ஏற்று எனது இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி எனது மனைவியை கண்டுபிடித்து எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.விசாரணை நடத்திய போலீசார் தொழிலாளி மற்றும் அவரது இரு மகள்களையும் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

Tags : teenager ,daughters ,office ,collector ,
× RELATED ‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன்