×

50 சதவிகிதம் பேர் ஆப்சென்ட் குரூப் 1 தேர்வுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட வில்லையா?

நாகர்கோவில், ஜன. 5:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்1 முதனிலைத் தேர்வு நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்தது. மொத்தம் 5443 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று தேர்வு எழுத 2677 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள 2766 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் தேர்வு மையங்களில் இருக்கை காலியாக காணப்பட்டது. இதுபோல் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஆனால் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மொத்தம் 66 பதவிக்கு இந்த தேர்வு நடந்தது. இதில் ஒரு பதவிக்கு 1989 பேர் தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 விண்ணப்பித்து இருந்தவர்களில் 50 சதவீதம் பேர் ஆப்சென்ட் என கூறப்பட்டுள்ளது. இதில் ஆப்சென்ட் ஆனவர்களுக்கு முறையாக தேர்வுக்கான தகவல்கள், ஹால்டிக்கெட் வரவில்லை என தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் சசி என்பவர் கூறியதாவது: எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் பட்டபடிப்பு முடித்துவிட்டு வேலைக்கு ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கின்றனர். அவர்கள் 3 பேரும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

 ஆனால் தேர்வு நடப்பது தொடர்பான எந்த வித முன்னறிவிப்பும் அவர்களுக்கு தெரியவில்லை. வீட்டிற்கு ஹால்டிக்கெட் வரவில்லை. மேலும் விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி கூட வரவில்லை. இதனால் எனது பிள்ளைகள் 3 பேரும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தான் தமிழகம் முழுவதும் பலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்காது. இதனால்தான் தமிழகம் முழுவதும் நடந்த தேர்வில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும் என்றார்.

Tags : Absentee Group 1 ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ