×

நெல்லை அருகே முதல்வரின் அணிவகுப்பில் வந்த 3 கார்கள் அடுத்தடுத்து மோதல்

நெல்லை, ஜன. 5: பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பதற்காக தமிழக முதல்வர் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து வந்த போது முதல்வரின் காருக்கு பின்னால் வந்த முன்னாள் எம்பியின் கார் மீது அடுத்தடுத்து கார்கள் மோதியது. இதில் முன்னாள் எம்பி உள்ளிட்ட அதிமுவினர் காயமின்றி தப்பினர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 2.15 மணிக்கு வந்தனர். அங்கிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கார்களில் வல்லநாடு வழியாக சேரன்மகாதேவிக்கு சென்று கொண்டிருந்தனர். வல்லநாடு பஸ் நிலையம் அருகே சுமார் 3.10 மணிக்கு  முதல்வர் காருக்கு பின்னால் வந்த கார்கள் போட்டி போட்டுக் கொண்டு சென்றன. அப்போது ஒரு கார் திடீரென சாலையை கடந்த கன்றுகுட்டி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி நின்றது.

இதன் காரணமாக பின்னால் வந்த இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக விபத்தில் சிக்கிய காரின் பக்கவாட்டில் மோதி நின்றது. இதில் மூன்று கார்களும் சேதமானது. கார்களில் இருந்த நெல்லை முன்னாள் எம்பி கே.ஆர்.பி.பிரபாகரன், மதுரையைச் சேர்ந்த ராஜமோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் காயமின்றி தப்பினர். இதனையடுத்து பின்னால் வந்த மற்ற அதிமுக நிர்வாகிகளின் கார்களில் முன்னாள் எம்பி பிரபாகரன் உள்ளிட்டோர் ஏறிச் சென்றனர். முறப்பநாடு போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். தகவலறிந்த முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர்  முன்னாள் எம்பி பிரபாகரனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

Tags : Chief Minister ,Nellai ,parade ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...