வேலூர் மாவட்டத்தில் 4 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்

வேலூர், ஜன.5: வேலூர் மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹2,500 ரொக்கம் வினியோகிக்கும் பணியை நேற்று வேலூரில் அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாநிலத்தில் அரிசி பெறும் 2 கோடியே 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ₹2,500 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 10 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ₹5,604 கோடி நிதியையும் அரசு ஒதுக்கியது. அதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று காலை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹2,500 ரொக்கம் வழங்கும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 345 இலங்கை அகதி தமிழர் குடும்பங்களுக்கான கார்டுகள் உட்பட மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 339 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பையும், தலா ₹2,500 ரொக்கத்தையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் அண்ணா சாலை கற்பகம் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் ஏழுமலை, ஆவின் தலைவர் வேலழகன், காட்பாடி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ரேணுகாம்பாள் வரவேற்றார். அமைச்சர் கே.சி.வீரமணி ₹2500, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டிசேலைகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து ேபசியதாவது: கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் ₹2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த பொங்கல் பண்டிகையின்போது ₹1000 வழங்கினோம். கொரோனா காலத்தில் ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் சாதி மத பேதமின்றி ₹2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, அதிமுக தகவல் தொழில் நுட்ப வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>