×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.50 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

* இன்று முதல் வழங்கப்படுகிறது
* அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை மாவட்டத்தில், 7.50 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹2,500 வழங்க தமிழக அரசு வழங்குகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ள 7 லட்சத்து 50 ஆயிரத்து 104 குடும்பங்களுக்கு, 1,627 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, நாளொன்றுக்கு காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் என மொத்தம் 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிட்டுள்ளனர்.அதையொட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதில், பரிசுத் தொகுப்பு பெறும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் இடம் பெற்றுள்ள யாரேனும் ஒருவர் நேரில் சென்று பொருட்களை பெற்றுக்ெகாள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்கி, 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதையொட்டி, திருவண்ணாமலை வேங்கிக்கால் ரேஷன் கடையில் இன்று காலை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். அதில், கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ரேஷன் கடைகளில் ஆண்கள், பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படியில் விரைவில் வழங்கவும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடைெபறாமல் கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவுக்கும் மாவட்ட அளவிலான அதிகாரி தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், முறைகேடுகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 04175- 233063 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

Tags : families ,district ,Thiruvannamalai ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...