×

வேட்டவலம் அருகே பயங்கரம் மூதாட்டியை கழுத்து நெரித்து கொன்று 3 சவரன் நகை கொள்ளை: உறவினர் கைது

வேட்டவலம், ஜன.4: வேட்டவலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கழுத்து நெரித்து கொன்று 3 சவரன் கொள்ளையடித்த, அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா(70). இவரது கணவர் அண்ணாமலை, முன்னாள் ராணுவ வீரர். இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் ரவி என்பவரும் இறந்துவிட்டார். இதனால் சந்திரா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீன் வியாபாரி ஒருவர், சந்திரா வீட்டின் எதிரே நின்று கொண்டு அவரை அழைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சந்திராவின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு அடுப்பில் உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சுவற்றில் சாய்ந்தபடி சந்திரா இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், திருவண்ணாமலை ஏஎஸ்பி கிரண்சுருதி, டிஎஸ்பி அண்ணாதுரை, வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். அப்போது, மூதாட்டி சந்திராவின் முகத்தில் லேசான காயம் இருந்தது. மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை காணவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

எனவே, மூதாட்டி சந்திராவை யாரோ கொலை செய்து தங்க செயினை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சந்திராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சந்திராவின் அண்ணன் மகன் மனோகர் என்பவர் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சந்திராவின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், சந்திராவின் கணவர் அண்ணாமலையின் அண்ணன் மகனான, அதே கிராமத்தில் வசிக்கும் மோகன்(61) என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சந்திராவை அவர்தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சந்திராவின் 3 சவரன் செயினை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `சந்திரா தனது உறவினரான மனோகர் குடும்பத்துக்கு மட்டும் பணம் கொடுத்து உதவி வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம். இதனால் நேற்று முன்தினம் சந்திராவின் வீட்டிற்கு சென்ற அவர் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோகன், சந்திராவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை எடுத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று மோகன், சந்திரா வீட்டிற்கு வந்து சென்றதாக கிடைத்த தகவலின்பேரில் விசாரணை நடத்தியதில் அவர் சிக்கிக்கொண்டார்'' என்றனர்.

Tags : death ,Vettavalam ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு