×

கொரோனா பரவல் காரணமாக 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

வேலூர், ஜன.4: கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் வழக்கமாக ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

அதன்படி பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கனவே பட்டியல் சமர்ப்பித்தவர்கள் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று பரவலால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பட்டியலில் சேர்க்கக்கூடாது. அதேபோன்று ஆசிரியர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது. அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Teachers ,corona spread ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்