பள்ளிகொண்டா டோல்கேட்டில் குட்கா சிக்கியது: 2 பேர் கைது

வேலூர், ஜன.4: பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று அதிகாலை வேனில் கடத்தி வரப்பட்ட ₹7.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. போலீசாரின் வாகன சோதனையில், ஒரு சில இடங்களில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், கடத்தலை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று அதிகாலை பள்ளிகொண்டா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது மூட்டைகளில் சுமார் ₹7.50 லட்சம் மதிப்பிலான 761 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா(46), சென்னையைச் சேர்ந்த லோகேஷ்(26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து குட்கா கடத்தலில் சென்னையில் உள்ள முக்கிய புள்ளி யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 30ம் தேதி பள்ளிகொண்டா டோல்கேட்டில் ₹6.37 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடதத்தக்கது.

Related Stories:

>