×

கோவில்பட்டியில் முதல்வர் எடப்பாடி பிரசாரம் அதிமுகவினர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோவில்பட்டி, ஜன. 4: கோவில்பட்டி பகுதியில் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். விவசாயிகள், வணிகர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று  கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். காலை 8 மணிக்கு கோவில்பட்டி கே.ஆர். கல்லூரியில் கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கல்லூரி வாசலில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி, கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அருணாசலம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்குள்ள கல்வி விநாயகர் கோயிலில் முதல்வர் தரிசனம் செய்தார். காலை 8.45 மணிக்கு கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பின்னர் தேவர் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ஏகேஎஸ் ரோட்டில் நடந்து சென்ற முதல்வர்  அங்குள்ள கடையில் டீ குடித்தார். அதிமுக அரசின் சாதனை விளக்க நோட்டீஸ்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். அப்போது பொதுமக்கள், அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் பசுவந்தனை ரோட்டில் மண்டபத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு தேர்தல் வியூகங்கள் குறித்து விளக்கினார்.

அதன்பின்னர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். 11.45 மணிக்கு தெற்கு திட்டங்குளத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மதியம் 12.15 மணிக்கு விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் நெசவாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 12.45 மணிக்கு பஸ்நிலையம் முன்பு விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். மாலை 3 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முதல்வரின் வருகையையொட்டி கயத்தாறு நாற்கர சாலையில் இருந்து கோவில்பட்டி வரை அதிமுக கொடி தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் நகர் முழுவதும் கட்சிக் கொடி தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் கட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது. நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, சின்னப்பன் எம்எல்ஏ, ஆவின் சேர்மன் சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ராமர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் லட்சுமணபெருமாள், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, கருப்பசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, இணைச் செயலாளர் மாரியப்பன், வர்த்தக அணி அமைப்பாளர் ராமர், நகர மாணவரணி செயலாளர் விநாயகாமுருகன், யூனியன் துணைச் சேர்மன் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் தங்கமாரியம்மாள், சந்திரசேகர், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன் மற்றும் ஆபிரகாம் அய்யாத்துரை, பாபு, யூனியன் முன்னாள் துணைசேர்மன் சுப்புராஜ், தொழிலதிபர் காமராஜ், 29வது வார்டு செயலாளர் மாரிமுத்து, எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஆழ்வார் உதயகுமார், இளைஞர் பாசறை செயலாளர் அஜய்குமார், புதூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனி என்ற ராஜகோபால், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தனவதி பங்கேற்றனர்.

Tags : Edappadi ,campaign ,public ,Kovilpatti ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்