சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் முடக்கம் பொதுமக்கள் தவிப்பு

சாத்தான்குளம், ஜன. 4: சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதார் மையம் செயல்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். சாத்தான்குளத்தில் தாலுகா அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ஆதார் மையத்திலும், தலைமை அஞ்சலகத்திலும் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் தாலுகாவை சேர்ந்தவர்கள் மட்டும் ஆதார் சேர்க்கை, பெயர், முகவரி திருத்தம் செய்து கொள்ளலாம். அஞ்சலக ஆதார் மையத்தில் அனைத்து தரப்பினரும் ஆதாரில் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்து கொள்ளலாம். இங்கு தினமும் 10 பேருக்கு ஆதார் சேவை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் அஞ்சலக ஆதார் சேவை மைய இயந்திரம் கடந்த 20 நாள்களாக பழுது அடைந்து காணப்படுகிறது. இதனால் கிராம பகுதியில் இருந்து வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே  இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் ஆதார் மையம் நல்லமுறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அஞ்சலகத்தில் கேட்டபோது, ஆதார் சேவை மைய இயந்திரத்தை தூத்துக்குடியில் இருந்து இன்ஜினியர் வந்து சரி செய்ய வேண்டும். இந்த வாரம் சீரமைப்பதாக தெரிவித்துள்ளனர் என்றனர்.

அஞ்சலகத்தில் தபால் மற்றும் வங்கியும் செயல்படுகிறது. இங்குள்ள பணியாளர்களால் அதனை கவனிக்கவே சரியாக உள்ளது. இதற்கிடையே ஆதார் சேவை மையத்தையும் இவர்களையே கவனிக்க கூறியுள்ளதால் பணிசுமை ஏற்பட்டு  தாமதம் ஆவதாக பணியாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அஞ்சலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு தனியாக பணியாளர்கள் நியமித்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>