×

பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று முதல் இயக்கம் பாவூர்சத்திரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் நிறுத்தம் ரத்து பயணிகள் அவதி

நெல்லை, ஜன. 4:  நெல்லை, தென்காசி மாவட்ட மக்களுக்கு கேரளா செல்ல பயன்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் 10 மாத இடைவெளிக்கு பின்னர் இன்று இயக்கப்படுகிறது. அதன்படி வண்டி எண் 06791 நெல்லை - பாலக்காடு சிறப்பு ரயில் இன்று (4ம் தேதி) முதல் நெல்லையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். வண்டி எண் 06792 பாலக்காடு - நெல்லை சிறப்பு ரயில் நாளை 5ம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

ஏற்கனவே இயக்கப்பட்ட பாதையில் சென்றாலும், இந்த ரயிலின் நிறுத்தங்கள் இப்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கோட்டை நிறுத்தம் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 06791 நெல்லை - பாலக்காடு சிறப்பு ரயில் பாவூர்சத்திரம், கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களிலும், வண்டி எண் 06792 பாலக்காடு - நெல்லை சிறப்பு ரயில் கீழக்கடையம் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிலையங்கள் ஒரு மார்க்கத்தில் மட்டுமே நிறுத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கோட்டை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட பயணிகள் சங்கத்தை சேர்ந்த பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், ‘‘வணிக ரீதியாக கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்று வட்டார மக்கள் கேரளா செல்கின்றனர். புதிய சிறப்பு ரயிலுக்கான அட்டவணையில் செங்கோட்டை நிறுத்தம் இரு மார்க்கத்திலும், பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட நிறுத்தங்கள் ஒரு மார்க்கமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாலருவி எக்ஸ்பிரசிற்கு முன்பு போல் 3 நிறுத்தங்களையும் வழங்கிட அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Balaruvi Express ,railway stations ,Pavoorchatram ,Red Fort ,
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...