×

தமிழகம் முழுவதும் 91 அரசு கலைக்கல்லூரிகளிலும் திறந்தநிலை பல்கலை மாணவர் சேர்க்கை: வேலைவாய்ப்பு பெற்றுதரவும் ஏற்பாடு

நெல்லை, ஜன. 4: உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக தமிழகத்திலுள்ள 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மூலமும் திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் நெல்லை மண்டல அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் புத்தாக்க பயிற்சி முகாம் ராணி அண்ணா கல்லூரியில்  நடந்தது. கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை வகித்தார்.  முனைவர் குமார் முன்னிலை வகித்தார். திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தகவலியல் மைய இயக்குனர் முனைவர் அருள் லாரன்ஸ், முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:

அகில இந்திய அளவில் உயர்கல்வி பெறுவதில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி 2035ம் ஆண்டு 50.7 சதவீதம் பேர் உயர்கல்வி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2018-2019ம் கல்வி ஆண்டிலேயே  49.3 சதவீதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை எட்டியுள்ளோம். இந்திய அளவில் 39 ஆயிரத்து 931 கல்லூரிகள் மற்றும் 993 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. தமிழக அளவில் 59 பல்கலைக்கழகங்கள் 2 ஆயிரத்து 462 கல்லூரிகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அதிக ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி அளித்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகள்  மூலமாக மாணவர் சேர்க்கையை விரிவுபடுத்தி உள்ளோம். நெல்லை ராணி அண்ணா கலைக் கல்லூரி மூலமும் மாணவர் சேர்க்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் மட்டும் ஆண்டுதோறும் 6 ஆயிரத்து 200க்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்தாலும் ஆயிரத்து 200 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது. இங்கு இடம் கிடைக்காதவர்கள் எங்கள் பல்கலையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டே பல மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதுதவிர தென்மாவட்டங்களில் ஏராளமான சேர்க்கை மையங்களும் செயல்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில் இதுவரை 8 ஆயிரத்து 616 பேர் சேர்ந்து உள்ளனர். எங்கள் பாடத்திட்டங்களை பல உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. ஜனவரி 3ம் வாரத்தில் நவீனமாக்கப்பட்ட இணையதளம் அறிமுகம் ஆகிறது. கடந்த 2019-20ம் கல்வியாண்டில் பயின்று முடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தந்திருக்கிறோம். வேலை பார்க்கும் மாணவர்கள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Open University ,Government Art Colleges ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...