×

விவசாய தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை

தர்மபுரி, ஜன.4: தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில்,  வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் 3 சென்ட் நிலம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் இலவசமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகள் பட்டியலை விஏஓ, ஆர்ஐ, தாசில்தார், கலெக்டர் அலுவலகங்களில் இருக்கும் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்,

விவசாய தொழிலாளர்களுக்கு ஏர் உழவு மாடுகள், கறவை மாடுகள் வாங்க நிபந்தனையின்றி ₹98,500 வங்கி கடன் வழங்க வேண்டும். 100 நாள் திட்டத்தின் கீழ், வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்கி தின சம்பளம் ₹700 வழங்க வேண்டும். 60 வயது கடந்த உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ளவர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மயானத்திற்கான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம், தெரு விளக்குகள், தனி நபருக்கு 30 லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் தினமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 6ம் தேதி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா