×

புத்தாண்டு கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து வாலிபர் அதிரடி கைது

விழுப்புரம், ஜன. 4:  புத்தாண்டு கொண்டாட பணம் கொடுக்காத நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்துள்ள அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவுதம்(22), தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த தங்கமணி மகன் தமிழ்மணி (23), பத்தாம் வகுப்பு வரை முடித்து விட்டு தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். தமிழ்மணி கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி இரவு புத்தாண்டையொட்டி கேக் வாங்க கவுதமிடம் 200 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு கவுதம் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  
 
 உடனே அங்கிருந்த நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இருவரும் வீடு சென்றுள்ளனர். இதனால், ஆத்திரத்தில் இருந்த தமிழ்மணி கடந்த 2ம்தேதி தேதி இரவு 9 மணியளவில் கவுதம் வீட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது, வீட்டின் வெளியே நின்றிருந்த கவுதமிடம் தமிழ்மணி கேக் வாங்க பணம் தர மறுத்ததை மனதில் வைத்துக்கொண்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டி மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவுதமை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் கவுதம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.  சத்தம் கேட்டு கவுதம் வீட்டிலிருந்து உறவினர்கள் வருவதற்குள் தமிழ்மணி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த கவுதமை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவுதம் கொடுத்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கேக் வாங்குவதற்கு பணம் தர மறுத்த நண்பனை நண்பனே சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : New Year ,rage friend ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!