×

தெர்மோகோல் மாஜி மந்திரி கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சிசிடிவி கேமராவில் சிக்கிய அந்த அதிகாரி யாரு… அப்படி என்னதான் செய்தாரு…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்ட டாஸ்மாக் மாவட்ட அதிகாரி பொறுப்பில் இருப்பவர், நெல்லையை சேர்ந்தவராம். அவர் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார்களை அங்கு பணியாற்றுபவர்கள் புகார் வாசிக்க தொடங்கியுள்ளார்கள். கார் டிரைவர், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆகியோருடன் மாவட்ட அதிகாரி பொறுப்பில் இருப்பவர், குறிப்பிட்ட கடைகளுக்கு சென்று திடீர் ஆய்வு நடத்துவார்களாம். அப்போது கடையில் மொத்த சேல்ஸ் விபரத்தை பார்க்கிறார்கள். மொத்த விற்பனை தொகையில் ரூ.1 லட்சத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், ஆய்வு தொகை ரூ.10 ஆயிரம் என்று கடைக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.40 ஆயிரம் வரை கறக்க ஆரம்பித்துள்ளார்கள். சமீபத்தில் 7 கடைகளுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை கலெக்ஷன் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்துள்ளார்களாம். கூடவே நீங்களே அதிக விலைக்கு மதுபானத்தை விற்றுக்கொள்ளுங்கள் என்று முறைகேட்டில் ஈடுபட விற்பனையாளர்களையும் மாவட்ட அதிகாரி கட்டாயப்படுத்துகிறாராம். இவையெல்லாம் டாஸ்மாக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் டாஸ்மாக் பணியாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்களாம்… சிசிடிவி கேமரா ஓபனாகுமா… அதிகாரி மீது நடவடிக்கை பாயுமா என்பதுதான் டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் பேச்சாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரகசிய அறிக்கையால் ஆடிப்போயிருக்கும் மாஜி மந்திரி… விசாரணையில் என்ன உளறி கொட்டப்போகிறாரோ என்று ஒரு குரூப் பயப்படுதாமே, ஏன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் செய்த முறைகேடு தொடர்பாக தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அணையை தெர்மோகோல் கொண்டு மூடிய விஞ்ஞானியானவர், கலகலத்து தவிக்கிறாராம். சாதாரண வார்டு பிரதிநிதியாக இருந்தவர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகள் ‘ஒற்றுமைக்கு’ பெயர் போன ஒரே துறையை வகித்தவர். இத்துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, கடந்த 10 ஆண்டு காலம் தனக்கென ஒரு தனி வட்டத்தை உருவாக்கி தனது செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதாகவும், அந்த வட்டத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராதபடி பார்த்துக்கொண்டார் என்றும் அவர் மீது புகார் எழுந்துள்ளது. ஆட்சி அதிகாரத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் கொடிக்கட்டி பறந்ததாம். கடந்த இலைக்கட்சி ஆட்க்காலத்தில் ரூ.2,393 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கியதிலும், கூட்டுறவுத்துறையில் சாக்கு ஏலத்திலும், சிறுவணிக கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட இத்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இதன்மூலம் கிடைத்த வருமானத்தில், அவர் தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலத்திலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக உளவுத்துறை ரகசிய அறிக்கை கொடுத்துள்ளது. இதனால் எப்போது என்ன நடக்குமோ என மனிதர் பதற்றமாகவே இருக்கிறாராம். இதில் இருந்து தப்பிக்க கட்சியின் சட்ட ஆலோசனை குழுவையும் நாடியுள்ளராம்… அதே சமயம் அவரால் பயனடைந்தவர்கள் எங்களை எங்கே காட்டி கொடுத்துவிடப்போகிறாரோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வடை போச்சே என்று காக்கை புலம்பலாம்… காக்கிகள் புலம்பலாமா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் போளூரு அருகே கரைப்பூண்டி, சனிக்கவாடின்னு செய்யாற்றோட கிளை ஆறுகள் இருக்குது. இந்த ஆற்றுல மணல் கடத்தல் ஓஹோன்னு நடக்குது. இந்த கடத்தலுக்கு ஒருங்கிணைப்பாளராக, இலை கட்சியில பேரவை பொறுப்பு வகிக்குற நான்கு எழுத்துக்காரர் செயல்படுறாராம். இவருக்கு மட்டும் அந்த ஏரியாவுல 10 மாட்டு வண்டிங்க இருக்குது. அதோட சேர்த்து, சுற்றுவட்டாரத்துல இருக்குற 50 மாட்டு வண்டிக்காரர்களையும் ஒருங்கிணைச்சு, மணல் கடத்தல் தடையில்லாம நடக்குறதுக்காக, மாதந்தோறும் போலீசுக்கு மாமூல் கட்டுறாங்களாம். இந்த மாமூல் மேட்டர், மாவட்ட உயர்காக்கிக்கு தெரிஞ்சிருக்குது. உடனே மாவட்ட உயர்காக்கி, போளூரு காக்கிங்கள அழைச்சி, லெப்ட், ரைட்னு செம டோஸ் விட்டாராம். இதனால் போளூரு காக்கிங்க, மணல் கடத்தல் காரங்களை அழைச்சி, கொஞ்ச நாளைக்கு மணல் கடத்துறத நிறுத்துங்கன்னு, சொல்லியிருக்காங்க. இப்ப, மாதந்தோறும் வந்த மாமூல் போச்சேன்னு புலம்பி வர்றாங்களாம். மணல் கடத்தல் ஒருங்கிணைப்பாளரோ, கரன்சி நோட்டை நீட்டி, மணல் கடத்தலுக்கு எப்ப சார் பர்மிஷன் கொடுப்பீங்கன்னு கேட்டு போலீசை நச்சரித்து வர்றாராம்… கையிருந்தும் வாங்க முடியல… வடை இருந்தும் சாப்பிட முடியலை என்று காக்கிகள் புலம்பி வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா….

The post தெர்மோகோல் மாஜி மந்திரி கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thermocol ,ex ,minister ,Gili ,Yananda ,Peter ,Tasmac district ,Kumari district ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...