×

புவனகிரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிக்கினார்: தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

புவனகிரி, ஜன. 4: புவனகிரி நகரில் வங்கி மற்றும் நிதி நிறுவனம் இயங்கும் ஒரு வளாகத்தில் தனியார் அலுவலகம் ஒன்று உள்ளது. ஜிஎஸ்டி கணக்குகளை தயாரிக்கும் இந்த தனிநபர் அலுவலகத்தில் அழுகிய நிலையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் ஒன்று கடந்த 1ம் தேதி கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கீழ் புவனகிரி கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு அருகே உள்ள பிஎஸ் பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா (35) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்ததில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் இறந்து கிடந்த சத்யா அந்த இடத்திற்கு வருவதும், முதல் மாடியில் இருந்து ஒருவர் வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்வதும் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அந்த வாலிபர் மட்டும் தனியே வெளியே செல்வதும் பதிவாகி உள்ளது.

இதை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது சிசிடிவி காட்சியில் இருந்த நபர் அந்த அலுவலகத்தில பணியாற்றும் ஊழியரான சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தரசூர் கிராமத்தைச் சேர்ந்த மாறன் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் நேற்று மாறனை பிடித்துள்ளனர். அப்போது அவர் வாந்தி எடுத்தபடி இருந்தார். இது பற்றி அவரிடம் விசாரித்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இறந்து போன சத்யாவுக்கும்,  மாறனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் போது பழக்கம் இருந்ததாகவும், அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் அடிக்கடி மாறனும், சத்யாவும் சந்தித்து தனிமையில் இருப்பதும், அதுபோல் சம்பவத்தன்றும் வந்து தனிமையில் உல்லாசமாக இருந்த நேரத்தில்தான் இந்த உயிரிழப்பு நடந்ததும் தெரிய வந்துள்ளது .

இதையடுத்து. எப்படி சத்யா உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தொடர்ந்து விசாரணை நடத்திட போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Tags : murder ,Bhubaneswar ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...