×

துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தம்பதி தேரூர் இரட்டை கொலை வழக்கை கை கழுவுகிறது சிபிசிஐடி? 9 ஆண்டுகள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் இல்லை

நாகர்கோவில், ஜன.4: 9 ஆண்டுகளை கடந்தும், தேரூர் வன ஊழியர், அவரது மனைவி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத நிலையில். சிபிசிஐடி போலீசாரும் வழக்கை கைவிடும் முடிவுக்கு வந்து விட்டனர். சுசீந்திரம் அடுத்த தேரூரை சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். ஆரல்வாய்மொழி வன சோதனை சாவடியில் பணியில் இருந்தார். இவரது மனைவி யோகீஸ்வரி. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி, நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பைக்கில் இவர்கள் இருவரும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

தேரூர் இசக்கியம்மன் கோயிலை கடந்து சென்ற போது இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கும்பல் தப்பியது. இந்த கொலை தொடர்பாக அப்போதைய ஏ.எஸ்.பி.யாக இருந்த தர்மராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 2 மாத விசாரணைக்கு பின், அப்போதைய குமரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சகாயம் மற்றும் பிரபல ரவுடிகள் உள்பட 11 பேரை அடுத்தடுத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்கள் மீது, குமரி மாவட்ட காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிய வில்லை.

குறிப்பாக சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள், போலீசார் கைப்பற்றியதாக கூறப்பட்ட துப்பாக்கியில் பொருந்த வில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த தர்மராஜன், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் வரை இந்த மாவட்டத்தில் அவர் பொறுப்பில் இருந்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிய வில்லை. இதற்கிடையே யோகீஸ்வரியின் தாயார் தரப்பில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கன்னியாகுமரி டி.எஸ்.பி.யாக இருந்த வேணுகோபால் (தற்போது நாகர்கோவில் டி.எஸ்.பி.யாக உள்ளார்.) 5 மாத காலத்துக்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் வேணுகோபாலும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிய வில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடக்கத்தில் இந்த வழக்கில் கைதான அனைவரிடமும் சிபிசிஐடி மறு விசாரணை நடத்தியது. சிபிசிஐடியாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வழக்கில் விசாரணை நடத்த முடிய வில்லை. போலீஸ் குற்றம் சாட்டிய அனைவரும் கைதான பின்னரும், ஆதாரங்கள் கிடைக்க வில்லை. தற்போது அவர்களும் இதை கிடப்பில் போட்டுள்ளனர். இரட்டை கொலை வழக்கில் 9 ஆண்டுகளை கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் இருப்பது ஏன்? என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. முழுக்க, முழுக்க குற்றவாளிகளை ஜோடித்து இந்த வழக்கில் கைது செய்தார்களா? என்ற கேள்வி நீடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பதில் தர வேண்டும்.

நீதிமன்றத்தை நாட உள்ளோம்
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த சகாயத்திடம் இது குறித்து கேட்ட போது, தேரூர் இரட்டை கொலைக்கும், எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். நான், அரசியலில் வேகமாக வளர்ந்து வந்ததை தடுக்க நடந்த சதியாக தான் இதை பார்க்கிறேன். தர்மம் நிச்சயம் வெல்லும். சிபிசிஐடிக்கு மாற்றிய பின்னரும் கூட எந்த முன்னேற்றமும் இல்லை. சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறோம். விரைவில் சிபிஐக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.

Tags : CBCID ,Tharoor ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...