நர்சிங் மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல்: பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியர் மீது வழக்கு

திங்கள்சந்தை, ஜன.4: நர்சிங் மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வில்லுக்குறி பகுதியை சேர்ந்த பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியை ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இரணியல் அருகே உள்ள பாராமெடிக்கல் கல்லூரி 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் செயல்படுவதாக கூறி மாணவிகளை சேர்த்தனர். இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரியில் ஆய்வகங்கள், எக்ஸ்ரே, நூலகம் போன்ற வசதிகள் இல்லை என்றும், கல்லூரி தாளாளர் மாணவிகளின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

2 மாதம் கூட பயிற்சி பெறாத நர்சிங் மாணவிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை மாணவிகளுக்கு கொடுக்காமல் கல்லூரி தாளாளர் கைப்பற்றியுள்ளார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மாணவிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாணவிகள் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு அளித்தனர். இதேபோல் இரணியல் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே பாராமெடிக்கல் கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவிகள் 125 பேர் படிப்பதாகவும், அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதாகவும், இதில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்து தலைமை ஆசிரியை செல்வராணி மாணவிகளை திட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 31.12.2020 அன்று மாணவிகள் 11 பேர் டி.சி, சான்றிதழ் கேட்டு கல்லூரிக்கு சென்றபோது கல்லூரி முதல்வர் ஆன்றோ செல்மர் மற்றும் செல்வராணி ஆகியோர் அவர்களை அவதூறாக பேசி அவரவர் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.  

கல்வி நிறுவனத்திற்கு அரசு அங்கீகாரம் உள்ளதா? என்று மாணவிகள் கேட்க, அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கல்லூரியில் குளியல் அறையை எட்டிப்பார்த்ததாகவும் உடன்குடியை சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஆன்றோ செல்மார் மற்றும் செல்வராணி ஆகியோர் மீது இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>