×

குமரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர் பாதிக்கும் மேல் தேர்வு எழுதவில்லை: 2677 பேர் எழுதினர்

நாகர்கோவில், ஜன.4:  குமரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பாதிக்கும் மேல் தேர்வு எழுதவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-1 (குரூப்-1) முதனிலைத் தேர்வு நேற்று குமரி மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்தது. மொத்தம் 5443 விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 2677 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 2766 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனால் தேர்வு மையங்களில் இருக்கைகள் காலியாக காணப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தேர்வு எழுத வராதது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். 4 நடமாடும் குழுக்கள் மற்றும் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தது. 18 தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடைபெறாவண்ணம் தடுக்க காவல் துறையினர் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 18 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்து கண்காணிக்க வீடியோகிராபர் நியமனம் செய்து கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கைகளை சுத்தப்படுத்திட சானிட்டைசர் போன்றவையும் வழங்கப்பட்டது. தேர்வு கூடங்களுக்கு சமூக இடைவெளியுடன் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, இந்து கல்லூரி, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

‘பரியேறும் பெருமாள்’, வேள்பாரி’
தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு மாரி செல்வராஜ் என்பவர் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ ஆகும். இந்த திரைப்படம் பற்றிய கேள்வி ஒன்று நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் இடம்பிடித்திருந்தது. ‘தலைசிறந்த படைப்பான பரியேறும்பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ் காணும் கூற்றுகளில் அல்லது கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்’ என்ற கேள்விக்கு,  இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது. இப்படம் மிகச்சிறந்த படம் என்ற வகையில் பிலிம்பேர் விருது பெற்றது.

இப்படம் திரு மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது என்று விடைகள் வழங்கப்பட்டிருந்தது. இதனை போன்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் படைப்பான ‘வேள்பாரி’ என்ற நூலை பற்றிய கேள்வியும் இடம்பிடித்திருந்தது. ‘சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்  எழுதிய வேள்பாரி என்ற நூலின்படி உள்ள சரியான கூற்றை அல்லது கூற்றுகளை தேர்வு செய்யவும். ‘பாரி’ பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார். வேள்பாரி கதையானது மனிதனின் பேராசைக்கும், இயற்கைக்கும் இடையிலான முரணை பறைசாற்றுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.

Tags : district ,Kumari ,half ,Group-1 ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...