×

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி பஜனை பாடி பக்தர்கள் போராட்டம்

குளச்சல், ஜன.4: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி பக்தர்கள் பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக 8  மாதங்களுக்கு மேலாக கோயில்கள் மூடப்பட்டன.  பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சில தளர்வுகளுடன்  அக்டோபரில்  வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் அர்ச்சனை செய்யவும்,  பிரசாதம் வழங்கவும், பிரகாரங்களை பக்தர்கள் சுற்றி வரவும்  அனுமதிக்கப்படவில்லை.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் வாங்கி வரும் அர்ச்சனை பொருட்களை, பயன்படுத்தி அர்ச்சனை செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் அர்ச்சனை பொருட்களை   கோயில் முன் வைத்து செல்கின்றனர். இதனால் கோயில் வாசலில் பூஜை பொருட்கள்  தினமும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் குருந்தன்கோடு ஒன்றிய  இந்து  கோயில்கள் கூட்டமைப்பு சார்பில்  கோரிக்கைகளை வலியுறுத்தி  பகவதியம்மனிடம்  மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
அப்போது கோயிலில் பூசாரிகள்  இல்லை. இதனால் பூசாரிகள் வரும்வரை காத்திருந்து அர்ச்சனை செய்த பின்பே  செல்வோம் என்று கூறி கோயிலுக்குள் தரையில் அமர்ந்து கொண்டு பஜனை பாடி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் குமரி மாவட்ட இந்து கோயில்களின்  கூட்டமைப்பு அமைப்பாளர் பதி, துணைத்தலைவர் வேல்தாஸ், ஒன்றிய தலைவர்  வேலப்பன் உள்பட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து கோயிலுக்குள்  வந்த பூசாரிகள் போராட்டக்காரர்களுக்கு மட்டும் அர்ச்சனை செய்கிறோம்  என்றனர். இதை அவர்கள் ஏற்கவில்லை. பக்தர்கள் கொண்டு வந்துள்ள பூஜை  பொருட்களையும் அர்ச்சனைக்கு எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு  அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் போராட்டம் நடந்தது. இதை  தொடர்ந்து பத்மநாபபுரம் தொகுதி தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார்  பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்காரர்களிடமிருந்து மனுவை  பெற்றுக்கொண்டார். மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைஏற்று அனைவரும் கலைந்து  சென்றனர்.

Tags : Devotees ,Bajna ,Mandaikadu Bhagavathyamman ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது