பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் ஒயிலாட்டம் அரங்கேற்றம்

சோமனூர், ஜன. 4:  அரசூர் அடுத்த பொத்தியாம்பாளையம் சங்கமம் நாட்டுப்புறக்கலை குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நேற்று நடைபெற்றது. தமிழரின் பாரம்பரியக்கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டக் கலைக்குழு கடந்த ஐந்து ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழு சோமனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளது.

இதையொட்டி 25வது சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்றம் நேற்று அரசூர் அடுத்த பொத்தியாம்பாளையம் கோபாலகிருஷ்ணர்  கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஒயிலாட்ட கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் சோமனூரை சேர்ந்த ஒயிலாட்ட ஆசிரியர் செந்தில்குமார் பல்வேறு கிராமங்களில் இதேபோல் தனது குழுவை அமைத்து ஒயிலாட்ட கலையை அரங்கேற்றி வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒயிலாட்டக் கலையை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கற்று கொடுத்து உள்ளார்.

இவரது பயிற்சியில் தற்போது சோமனூர் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் கலைக்குழு சோமனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளது. பொத்தியாம்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 60 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, ஒயிலாட்ட திறமையை வெளிப்படுத்தினர்.

ஒயிலாட்ட ஆசிரியர் செந்தில்குமார் கூறுகையில், ‘கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள் மற்றும் அழிந்துபோன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகிறது. நாட்டுப்புற கலைகள் உயிர்ப்போடு இருந்தால்தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து ஆறு மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருக்கி வருகிறோம், என்றார்.

Related Stories:

>