சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம்

ஊட்டி, ஜன. 4:   தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. நீலகிரியில் ஏற்கனவே 684 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கூடுதலாக 1860 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட், இயந்திரம் ஆகியவை நீலகிரிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது.

தற்போது கொரோனா கால கட்டம் என்பதால், 3 தொகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 683 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 885 ஆக உயர்ந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையமாக ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு வழக்கமாக வாக்கு எண்ணிக்கைக்கு 14 டேபிள்கள் அமைக்கப்படும். தற்போது வாக்கு எண்ணிக்கைக்கு 7 டேபிள்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தேர்தல் பணிக்கு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவு தேவைப்படுகிறது.

தேர்தல் பணிகளில் வருவாய்த்துைறயினர், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவார்கள். கடந்த காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட விரும்பாதவர்கள் தங்களது விண்ணப்பங்கள் தேர்தல் பிரிவிற்கு கொண்டு செல்லும் முன்னரே அவற்றை கோப்புகளில் இருந்து எடுத்து விடுவது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைப்பதையும் தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தேர்தல் பணிக்கு செல்லாமல் ஏமாற்றி வந்தனர். தற்போது வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்தலில் பணிபுரிய உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் விடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதனால் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இவ்விவரங்கள் கருவூலங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>