×

குரூப்-1 எழுத்து தேர்வில் 628 பேர் ஆப்சென்ட்

ஊட்டி, ஜன. 4: நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்-1 எழுத்து தேர்வை 388 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 628 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1 பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பீரிக்ஸ் பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினிகள் தெளித்து அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 3 மையங்களிலும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரியில் குரூப்-1 தேர்வை 1016 பேர் எழுதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த இத்தேர்வை 388 பேர் மட்டுமே எழுதினார்கள். 688 பேர் எழுதவில்லை. அதாவது 61.82 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. கொரோனா  அச்சம் காரணமாக பெரும்பாலான தேர்வர்கள் தேர்விற்கு வர தயக்கம் காட்டி  இருக்கலாம் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். முன்னதாக தேர்வு எழுத வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? எனவும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொண்டு தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டனர்.

உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள், தனியாக தேர்வு எழுத வைக்க ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். தேர்வையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விபத்தில் சிக்கிய வாலிபர்: ஊட்டியில் நேற்று காலை முதல் பனிமூட்டத்துடன் காலநிலை நிலவியது. இந்நிலையில் குரூப்-1 தேர்வு எழுதுவதற்காக கூடலூரை சேர்ந்த வசந்தகுமார் என்ற வாலிபர் இரு சக்கர வாகனத்தில் ஊட்டி நோக்கி வந்துள்ளார். அப்போது பைக்காரா அருகே வரும்போது, எதிர்பாராதவிதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து கிேழ விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் வசந்தகுமாருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்வு எழுதுவதற்காக ஊட்டி ஜோசப் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆய்விற்காக அங்கு வந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உடனடியாக மருத்துவர் வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் பேசி, வசந்தகுமார் தனி அறையில் தேர்வு எழுதவும், அவர் பதில் கூற அதை எழுத உதவியாளர் நியமிக்கப்பட்டார். மேலும் தேர்வு எழுத, கூடுதலாக ஒரு மணி நேரமும் அனுமதி பெற்று தந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர் தேர்வெழுதினார்.

Tags : writing test ,Group-1 ,
× RELATED குரூப்1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு...